Friday, January 14, 2011

பனியோடு பெய்தது



மார்கழியில் வானை பிய்த்து கொண்டு வெண் மழை பெய்து கொண்டிருந்தது. பனி மணல் போல் சமனாகவும் அடர்த்தியாகவும் என் வாசலில் படர்திருந்தது. அதில் குருவி அல்லாத சற்றே பெரிய பறவை ஒன்றின் கால் தடம் தெரியவும் அதை பின் தொடர்ந்து சென்றேன். எனக்கு புரியாத மொழியில் பாடிக்கொண்டிருந்தது பறவை. அநேகமாய் இந்த பாடலாய் இருக்கலாம் என்று அனுமானிக்கிறேன்.

கடல் பறவை
ஒன்றிடம் காதல் வயப்பட்டேன்.

இலைகள் நிறம் மாறின .
இடம் பெயரும் காலம் வந்தது.
பல மைல் கடந்து
கூட்டத்தோடு புலம்பெயற
புறப்பட்டது பறவை.

புறப்பட சிறகு விரிக்கும் முன்
அலைகளில் சிறு தூரம்
கால் நனைத்து நடக்கையில்
கடைசியாய் ஒரு முறை
திரும்பி பார்த்திருக்கலாம் .

அங்கே தான் உட்கார்திருந்தேன் நான்
அந்த மரக்கிளையில்

இருப்பு பிரதான படும் பொழுது உணர்வுகள் பின் வாங்கி கொள்ளும் என்பது எல்லா உரியினங்களுக்குமான பொது விதி போலிருக்கிறது.
ம்ம், யாரிடமோ சொல்லாமல் விட்டதை என்னிடம் வந்து ஏன் பாடிவிட்டு போகிறது பறவை? அடுத்த முறை காலடி தடங்களை பின் தொடர்வதில்லை என்ற முடிவுடன் உள் வந்து கதவடைத்தேன். பாடல் மட்டும் துல்லியமாய் கேட்டுக்கொண்டே இருந்தது. எங்கே நகர்தலும் அதே துல்லியதுடுன் அதே தீர்கதுடன் கேட்டு கொண்டே இருந்தது. அனுமானங்களை வெளியில் வைத்து அடைத்தேனா என்று உர்ஜிதப்படுத்த வாசல் வந்து கதவு திறந்து பார்த்தேன். வீடு வெளியே இருந்தது.

No comments: