Thursday, September 11, 2008

நான்


சொல் என்றொரு சொல் இல்லாமல் போனால் எண்ணங்களை எப்படி வெளிப்படுத்துவது..........................................
வெளிவர துடித்துக்கொண்டு உள்ளேயிருந்து எம்பி எம்பி பார்க்கும் சில அரூபமான கருத்துக்கள்...............
வார்த்தைகள் தீர்ந்து போன முடிவற்ற வெளியில் தனியே விடப்பட்டிருக்கிறேன்...........
சொல்லப்படாமலும் எழுதப்படாமலும் பேசப்படாமலும் எத்தனை சொற்கள் இந்த பிரபஞ்சத்தில் ஒர் முடிவு தேடி அலைகின்றனவோ.
யார் பேனா எவர் வாய் வழி இவை விட்டு விடுதலையாக போகின்றனவோ? பதில் கிடைக்காது அல்லது பதிலே இல்லை என்ற நிலையிலும் கூட தொடர்ந்து எழும் கேள்விகள். நான் என்று கூட ஒரு சொல்.. ம்ம்ம்... நான் என்றொரு சொல். இதில் என்னை நான் எப்படி உணர்த்துவது.
இதில் நான் எதை சொன்னாலும் கடைசியில் அது வெறும் சொல்லாகி விடப்போகிறது... என்னைப் பற்றி தோண்றிய வார்தைக்குப்பைகள் கோபம்
அன்பு அழகு
திமிர் குழந்தை காதல்
வெறுப்பு தனிமை நட்பு தூய்மை பொறாமை நடிப்பு பயம்
நான் என்கிற என் இருப்பை என் இருத்தலை தற்சமயம் இந்த வர்த்தைகள் தான் மீண்டும் மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கின்றன.. இதில் விடுபட்டுப் போன எல்லா சொற்கலும் உங்கள் மனதில் தோன்ற கடவதாக.. ..................................................................................................................................

நாட்கள்


மிக வேகமாக நகரும் நாட்களில் மெதுவாக நகர்ந்த நாட்கள் பற்றிய நினைவுகள் வருவதில்லை. ஆனால் மெதுவாக நகரும் நாட்களின் ஒவ்வொரு கணமும் கனம் பொருந்தியது என்றே தோன்றுகிறது.

நாட்களின் நீள அகலத்தை தீர்மானிப்பது யார்? எந்த விஞ்ஞான கணக்குகளுக்கும் அகப்படாமல், நாட்கள் தன்னை தானே ஒரு தையல்காரனின் கத்திரியை கொண்டு வெட்டி கொள்கிறது.ஒரு நடிகையின் துரிகையை கொண்டு ஒப்பனை செய்து கொள்கிறது.

ஒவ்வொரு நளும், ஒரு முடிவற்ற கணக்கியல் சமன்பாட்டை போல் நீண்டு கொண்டே போகிறது.

ஒவ்வொரு இரவோடும் ஒட்டிப் பிறக்கும் ஒரு பகல்.ஒவ்வொரு பகலோடும் ஒட்டிப் பிறக்கும் ஒரு இரவு.பகலின் நிகழ்வுகளுக்கு மெளன சாட்சியாய் நிற்கும் இரவுகள். இரவுகளின் சம்பவங்களை பறைசாற்றிக் கொண்டிருக்கும் பகல்கள். காலவெளியில் கணக்கற்ற பல இரவுகளும் முடிவற்ற சில பகல்களும்.

கானகத்தின் ஊடே பாயும் கதிரவனின் ஒளிக்கதிர்கள் சில பகல்களை அங்கே பொழிந்து விட்டு செல்கின்றது.கடல் மேல் காயும் சூரியனிலிருந்து கசிகிறது சில பகல்கள்.உடலுக்குள் பாய்ந்து உயிரை துளைத்து ஆன்மாவிற்கு உணவாகும் சில பகல்கள்.

இரயில் பயணத்தின் போது பின்னோக்கி ஓடும் சில இரவுகள்.பாயும் அருவியின் பாறை இடுக்குகளில் ஒளிந்து கொண்டிருக்கும் சில இரவுகள்.திரெளபதியின் முடியாத கூந்தலிலும் மிச்சமிருக்கிறது கொஞ்சம் இருட்டு.

நாட்கள் ஒரு தேர்ந்த கதை சொல்லியை போல் பல கதைகளை அனுபவமாய் தன்னுள் சுமந்து செல்கிறது.

தாஜ்மகல் கட்டிய கைகள் இதனுள் தான் கிடகின்றன....
கலீல் ஜீப்ரான் சொல்லாமல் விட்ட பல சொற்களும் இதனுள் புதைந்து இருக்கிறது.....
கார்மழையில் கண்ணன் நின்றாடிய காலிங்கன் இதனுள் தான் உறங்குகிறான்.
இதனுள்ளிருக்கும் கல்லறையிலிருந்து இன்னும் அனார்கலி சுவாசித்துக் கொண்டிருக்கிறாள். இந்த சுவாசத்தின் வெப்பம் தான் ஒவ்வொரு பகலையும் சூடாக்குகிறது.ஒவ்வொரு இரவையும் மோகத்தால் நிரப்புகிறது.மோகம் கொண்ட ஒவ்வொரு இரவிலும் தவறாமல் பொழிகிறது கார்மழை.

நாட்களின் சாளரங்கள் பெரும்பாலும் முடியே கிடக்கின்றன.அரிதாய் காட்சி தரும் நீண்ட கூந்தல் கொண்ட அரேபிய இளவரசி அதன் பின் அமர்ந்து தன் ராஜகுமாரனின் வருகைக்காக காத்திருக்கிறாள்.

பல மைல்களுக்கு அப்பால் செல்லும் இரயிலின் அருகே அதிர்கின்றன சில மஞ்சள் நிற பூக்கள் கொண்ட செடிகள்.

நாட்களின் அதிர்வுகளில் அதிர்கின்றேன் நானும்.............................