Wednesday, April 25, 2012

அந்நியமானது பெயர்

இன்னாருக்கு
இந்த பெயரை
யார்  சூட்டியிருப்பார்கள்.
அப்பெயரை இரண்டாக பிளந்து
முற்பாதியையும் பிற்பாதியையும்
வெவ்வேறு அழுத்தத்தில்
கீழ் முச்சை அடக்கி
நிதானமாக சொல்லி பார்க்கிறேன்.

அன்னாரின் முகத்தோடும்
பாவனைகளோடும்
சற்றும் பொருந்தாத
அந்த பெயர்
எங்களிடையே
ஒரு திரையாய்  மட்டும்
எஞ்சி  நிற்கிறது.

விடுதலை

விடுதலை என்பது
ஓர்  உணர்வா?
ஓர் இடமா?
அடைந்து விட வேண்டிய
ஓர்  இலக்கா?
அகாலமா?

சங்கிலிகள் எல்லாம்
உள்ளே இருக்க
வெளியில்
யாரிடம்
என்ன மன்றாடுகிறாய்? 

Wednesday, November 16, 2011

மறைந்ததெல்லாம் காண்பமன்றோ...




உற்று பார்த்து கொண்டிருந்தேன்
திரையில் தோன்றி மறைந்தன பெயர்கள்.
ஒன்றன் பின் ஒன்றாய்
வெவ்வேறு நீளத்தில் பல பெயர்கள்.
அடைமொழிகளுடன் சில
அடர்ந்த கைத்தட்டல்களோடு சில

திரைப்படம் துவங்கியது
இமை கவிழ்த்து
பார்வை விலக்கி
அமைதியாய் பார்க்க தொடங்கினேன்.

Thursday, September 29, 2011

கையோடு கொஞ்சம் வானம்.



கொஞ்சம் வானத்தை
சிறகோடு சுமந்து வந்தது
ஒரு வண்ணத்துபூச்சி.
வனத்தின் ஆகப்பெரிய
மலர் மீது வானத்தின்
வாசனையை தடவிவிட்டு
வந்த வேலை முடிந்ததென
சட்டென்று பறந்தது.

Wednesday, September 28, 2011

விட்டு பிரிகையில் ...


வேரோடு பிடுங்கி
வேறிடத்தில் நட்டு
வேலி கட்டி பாதுகாத்து
தண்ணீரோடு கண்ணீரும் உற்றி
பத்திரமாய் இருக்கும்படி
சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்தான்.

ம்ம்..

நீ பிளாஸ்டிக் செடி
என்றறிந்த தருணத்தில்
மரணித்துவிட்டது எல்லாம்.

Friday, September 23, 2011

கவிஞனின் தூரிகை


என் கவிதைகளை
இனி வார்த்தைப்படுத்த
முடியுமென்று தோன்றவில்லை.

எண்ணங்கள் அனைத்தும்
பிம்பங்களாகவும் குறியீடுகளாகவும்
தோன்றி மறைகின்றன.

எண்ணங்களை வரைந்தேவிடலமேன்றலோ
தூரிகையிலிருந்து ஒரு சேர
வழிகிறது கண்ணீரும் காதலும் .
சொற்களோ கதவடைத்து விட்டன
வண்ணங்களோ போதா புரட்சி செய்கின்றன.

சொல்லாமலே விட்டு போய்விட்டாலும்
உன்னிடம் சொல்ல ஏதோ
இருந்ததென யூகித்துக்கொள்.

சில வானங்களுக்கு அப்பால்.....

நான் விட்டு வந்த
வெளி எல்லாம்
உன் வன்ம வார்த்தைகள்.
என் ஒற்றை
காலடி சுவடுகள் மேல்
உன் புதிய துணையின் கால் மிதிகள்.

சில வானங்களுக்கு அப்பால்
மொழி தெரியாத
கடல் யட்சனிடம்
மோட்சம் யாசிக்கிறேன் நான்.

நீ ஏனோ
உன் புதிய அடையாளங்களை
புதிய கண்ணாடிகளில்
தேடி கொண்டிருக்கிறாய்.

கொஞ்சம் நட்பேனும் மிச்சமிருந்திருந்தால்
உன்னை கண்ணாடிகளிடமிருந்து மீட்டு
சுய தேடலுக்கு
அறிமுகப்படுத்தியிருப்பேன்.