Tuesday, July 4, 2023

பேரன்பு

 

இருளும் குளிரும் சூழ்திருந்த 
ஒரு இரவில்  நீங்கள் வந்தீர்கள்.

உங்கள் நிபந்தனை அற்ற பேரன்பால் 
அறையின் வெறுமையை  நிரப்பீனீர்கள்..
வெப்பம் பரவியது.

கட்டற்ற கருணை வழிந்தது 
உங்கள்  கண்களிலிருந்து.
முடிவற்ற முத்தங்கள்.
சிவந்தது நடுநிசி வானும்.
என் சிறிய உதடுகளும்.

இந்த தீண்டல் இன்னும் வேண்டும் 
எனும் பெருவெளியில் விட்டு  விலகுகிறீர்கள்...
கடந்து சென்ற இரயிலின் 
வேகத்தை உட்கொண்டு 
இன்னும் அதிர்ந்து கொண்டிருக்கும் 
தண்டவாளங்கள் நாம் இருவரும்.

என் பெண்மையோடு 
சேர்த்து நான் உனக்கு தரும் 
இன்னொரு விலை மதிப்பற்ற 
பரிசு என் மௌனம்.


 



நீள் இரவு

 



என் மோகத்தின் மைய்ய புள்ளிகளை 
தேடித்  தேடி நீள்கிறது 
உங்கள் விரல்கள்.
தீண்டலும் நம் கண்களும் 
சங்கமித்த அத்தருணம்.
உடல் முழுதும் உயிர் பாய்ந்த 
கற்சிலை என 
உறைந்து நிற்கிறேன்  நான்.

பின் கனத்த மௌனம்.
வெளியே நிழலாய் தெரியும் 
மலைக்குன்றுகள் கூட 
மேகங்களோடு உரிமையுடன் 
 கலவி, பின் கதை பேசி 
உறங்க போயின.
நாம் மட்டும் 
இன்னும் அசையாமல் நிற்கிறோம்.

இந்த இரவின் தாக்கம் பெரிது.
உங்கள் ஏக்கம் பெரிது.

நாம் கைகளை பற்றிக்கொண்டு 
நெற்றியோடு நெற்றியை இணைத்து 
கண்களை மூடி 
இனி கடக்க வேண்டும் 
இந்த இரவையும் 
இந்த  வாழ்வையும்.





மழை


தேவைக்கு அதிகமாய் 
குளிரூட்ட பட்டிருக்கும் 
இந்த விடுதி அறைகளும், 
 அதன் வெண் நிற மெத்தை படுக்கைகளும்,
பொதுவாய் என் தனிமையை
மிகைப்படுத்தி காட்டும்.

இன்று ஏனோ 
என் கவனம் முழுதும் அறையின் 
பெரிய கண்ணாடிகளிருந்து வழியும் 
சற்று முன் பெய்த மழை  மீது.

இந்த மழை உங்களை நினைவு  படுத்துகிறது.
நம் நெருக்கத்தை.
உங்கள் ஏக்கத்தை.
என் தாபத்தை.
நம் ஊடலை, கூடலை, காதலை, கருணனையை 
என் காதுகளில் மட்டும்  முணுமுணுக்கிறது.

இப்போது ஏன் வந்ததோ இந்த மழை.
இப்போது ஏன் நின்றதோ இந்த மழை.